கொல்லி / சதுரகிரி மலை Kolli hills

இயற்கை அளித்த கொடைகள்- தினம் ஒரு தகவல்.

கொல்லிமலை
        Kolli hills

இயற்கை வளம் மிக்க கொல்லிமலை,கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாகும்.மிதமான வெப்பம்,மக்கள்நெரிசலற்ற சுற்றுச்சூழல் மாசுபடாத தன்மை காரணமாக இன்றும் பசுமை போர்த்தியுள்ள இடங்களில் கொல்லிமலையும் ஒன்று. 

நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் கடல் மட்டத்தில் இருந்து 1000 முதல் 1600 மீட்டர் உயரமும் உள்ள இம்மலை சுமார் 400 ச.கி. பரப்பளவு கொண்டது.
 ஆத்தூர் வட்டத்துக் கொல்லி மலையிலுள்ள மிக உயர்ந்த சிகரம் வேடக்கார மலையாகும். அதன் உயரம் 4,663 அடி ஆகும்.

கொல்லும் கொடிய நோய்கள் நிறைந்தும், அத்தகைய கொடிய நோய்களையும் கொல்லும் அற்புத மூலிகைகள் கொண்டும் அழகுற விளங்குகிறது கொல்லி மலை.

இம்மலைக் காடுகளில் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானளாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.

நான்கு புறமும் சதுர வடிவில் மலைகளால் சூழப்பட்ட பகுதியாக உள்ளதால் இது சதுரகிரி எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலையின் பாதுகாவல் தெய்வமாக
கொல்லிப்பாவை விளங்குவதால் கொல்லிமலை என்றபெயர் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இம்மலையில் எண்ணற்ற மூலிகைகளும்,சித்தர்களும் நிறைந்து காணப்படுகின்றனர். ஆகாய கங்கை அருவி நீர் பாயும் ஓடை வழியாகச் சென்றால் ஒரு சிறு செங்குத்தான குன்றும் அதனுள் குகையையும் காணலாம். இது கோரக்கர் குகை எனப்படுகிறது. குகைப் பக்கத்தில் தென்புறம் ஒரு அகழி இருக்கிறது. இது கோரக்கர் 
குண்டம் என அழைக்கப்படுகிறது.

இங்கு கோரக்கர் என்னும் சித்தர் தன் மாணவர்களுடன் கூடி தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த குகையைச் சுற்றிப் பல அரிய மூலிகைகளைக் காணலாம்.

இங்கு பல சித்தர்கள் வாழ்ந்தார்கள். இன்றும் இங்கு சித்தர்களைக் காணலாம். அவ்வையார் முதல் 18 சித்தர்களும் இம்மலையில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இதற்கு ஆதாரமாக குகைகளும் காணப்படுகிறது. சித்தர்கள் இங்குள்ள மூலிகைகளின் பயன்களை அறிந்து அவற்றை மக்கள் பயன்படுத்தும் விதத்தில் ஓலைச் சுவடியில் எழுதி வைத்துள்ளனர்.

நவபாஷாண சிலைகள், பலவித விலை மதிப்புள்ள கற்கள் இம்மலையில் இன்றும் காணப்படுகிறது. இம்மலையில் உள்ள மூலிகைகள் தவிர பதிணென்கீழ் சித்தர்களால் தயார் செய்யப்பட்ட பல அரிய மருந்துகள், தைலம், ரசமணி, மூப்பு, சுண்ணம் இவைகள் கல்லறைகளில் புதை பொருளாக வைக்கப்பட்டிருப்பதாக காலங்கி நாதர் மலைவளம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லிமலை  மூலிகைகளின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. மருத்துவ குணம் வாய்ந்த அரிய வகை மூலிகைகள் அடர்ந்த காட்டுப் பகுதியிலும் நீர் கசிந்து கொண்டு இருக்கும் இடங்களிலும் காணப்படுகிறது. இம்மூலிகைகள் தானே வளர்ந்து பின்னர் அழிந்து வளரும் தன்மை கொண்டது.

இந்த மூலிகைகளை மாந்திரீக தன்மை வாய்ந்ததாக கருதி மலைவாழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளான வேலால் தாக்கப்பட்ட புண்ணை ஆற்றும் சாவல்யகரணி, துண்டிக்கப்பட்ட பாகங்களை ஒன்று சேர்க்கும் சந்தாண கரணி, ஜோதி விருட்சகம், சாயா விருட்சகம், அழுகுண்ணி, தொழுகண்ணி போன்ற மூலிகைகள் இங்கு மட்டுமே காணப்படும் அரிய மூலிகைகளாகும்.

இம்மலையில் மூலிகையைத் தேடி வரும் யாவரும் கொல்லிப்பாவையை வணங்கியே செல்ல வேண்டும் என சொல்லப்படுகிறது. இம்மூலிகைகளுக்கும் அரிய மருந்துகளுக்கும் காவலாக கொல்லிப்பாவை பெரியண்ண சுவாமி என்னும் தெய்வங்களை அமைத்து வைத்திருப்பதாக சித்தர் நூலால் அறிகிறோம்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.

இந்தியாவிலேயே கரடிகள் இந்த பகுதியில் மிக அதிகம்.  கொல்லி மலையில் மரங்களில் பாம்புகள் தலை கீழாகத் தொங்கிய படி இருக்கும் காட்சியை காணலாம், பலாப்பழம், அன்னாசி, பேரிக்காய், கொய்யா, மாம்பழம், காப்பி, அதிகம் விளைகிறது, காட்டுப்பகுதிகளில் மான்களும், மயில்களும் ஆங்காங்கே  சுற்றித் திரிவதை காணலாம்.

கொல்லிமலையில் நீர் ஊற்று நிறைந்த இடங்கள் அதிகம் காணப்படுகின்றன. இங்குள்ள குன்றுகளில் தேன் கூடுகளைக் காணலாம்.இங்கு கிடைக்கும் அரியவகை கலப்படமில்லா தேன் பாட்டில் ரூ.2000/க்கு சோளக்காடு பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது.விஷயம் அறிந்தவர்கள் மட்டும் இதனை வாங்கி செல்வர்.

பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில்  அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு மேற்கில் "கொல்லிப்பாவை" என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது.இப்பதுமை  சித்தர்களால் உருவாக்கப்பட்டது   எனவும் இப்பதுமை    உள்ள இடம் தற்போது எட்டுகை அம்மன் கோவில்  என அழைக்கப்படுவதாகும் கூறப்படுகிறது.    

வரலாற்று சிறப்பு கொண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி கொல்லிமலையை கி.பி 2ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தான்.ஓரி என்பதற்கு 
தேனின் முதிர்ந்த நிறம் என்று பெயர். இந்த நிறமுடைய குதிரையை இவன் பெற்று இருந்ததால் இவனுக்கு ஓரி என்ற சிறப்புப் பெயர் கிடைத்தது.

இவனுடைய இயற்பெயர் ஆதன். வில் எய்வதில் சிறந்தவன் ஆக விளங்கியதால் வல்வில் ஓரி என்று அழைக்கப்பட்டான். ஒரே அம்பில் யானை, புலியின் வாய், மானின் உடல், காட்டுப் பன்றி, உடும்பின் தலை ஆகியவற்றை துளையிட்டு,  ஐந்து விலங்கினங்களைக் கொன்றான் என்ற சிறப்பே வல்வில் ஓரி என்ற பெயர் நிலைக்க காரணமாயிற்று.மறவர் குடியைச் சேர்ந்தவன் வல்வில் ஓரி என வரலாற்றுச் சான்றுகள் கூறுகிறது.செம்மேட்டில் குதிரையில் அமர்ந்தவாறு 
ஓரியின் சிலை உள்ளது.

ராசிபுரம் சிவன் கோயிலும், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலும் வல்வில் ஓரி ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டவையாகும்.
சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். கி.பி. 12ம் நூற்றாண்டில்
இக்கோவில் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது.

அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக 1200 படிகள் இறங்கிச் சென்றால், இந்த நீர் வீழ்ச்சியில் நீராடலாம். 300 அடி உயரத்திலிருந்து 
எந்த வித தடையும் இன்றி நீர் விழுவது இதன் சிறப்பு. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாக இருத்தாலும்
அற்புதமான இயற்கை காட்சிகளை உள்ளடக்கியது இவ்விடம்.
மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் அளவான நீரோட்டம் இருப்பதால்  அப்போது நீராடலாம். 

ஆகாயகங்கை அருவிக்கு செல்ல முடியாதவர்கள் மாசிலா அருவி மற்றும் நம்மருவி ஆகிய அருவிகளில் நீராடலாம்.செப்டெம்பர் முதல் மார்ச் வரை பொதுவாக நீர் வரத்து இருக்கும்.

இவை தவிர சிக்குப்பாறை,தாவரவியல் பூங்கா, மற்றும் செல்லூர் நாடு பகுதிகளில் காட்சி முனையங்கள் உள்ளன.இங்கிருந்து பள்ளத்தாக்குகளின் அழகினை ரசிக்கலாம்.
 சிறிய ஏரியும் படகு இல்லமும் கூட இங்கு உண்டு.

மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. செங்குத்தான இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் (Hair Pin Bend) உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். கார், வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று.

செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும். இங்கு தங்கும் விடுதி கள்,காவல் நிலையம், 
தீயணைப்பு நிலையம், மருத்துவமனை,உணவு விடுதிகள், நூலகம் முதலியன உள்ளன.

மலையில் உள்ள மண்வளம் மற்றும் நீர் வளத்தால் இங்கு விளையும் அன்னாசி பழம் மிகுந்த சுவையுடையதாக உள்ளது. அந்த பழத்துக்கு ஏற்றார் போல் சந்தையில் விலை கிடைத்து வருகிறது. இதனால் கொல்லிமலையில் உள்ள சோளக்காடு வாரச்சந்தையில் அன்னாசிபழம் அதிகமாக கிடைக்கிறது.இந்த மலையில் அதிக முட்கள்களுடன் காணப்படும் நாட்டு ரக அன்னாசியும், முட்கள் இல்லாமல் காணப்படும் கியூ ரக அன்னாசிகளும் விளைந்து வருகிறது.

இம்மலையில் பெரிய பரப்பளவில் உள்ள பண்ணைகள் தவிர்த்து
பெரும்பாலும் இங்குள்ள பாரம்பரிய விவசாயிகள் இயற்கை முறையிலேயே ரசாயனம் கலக்காமல் விவசாயம் செய்வது கொல்லிமலைக்கே உரித்தான சிறப்பு.இங்கு விளையும் மிளகு சிறியதாகவும் காரம் மிக்கதாகவும் இருக்கும்.அதிபோல் இங்கு விளையும் செவ்வாழை,ஆரஞ்சு, பலா மற்றும் கொய்யா பழங்கள் சுவை மிகுந்து காணப்படும்.

வரகு,தினை,போன்ற பல்வேறு இயற்கை வழி முறையில் உற்பத்தி செய்யப்பட்ட சிறு தானியங்கள்,கொல்லி மலை தேன்,நறுமண தாளித பொருட்கள் மற்றும் மூட்டு வலி நீக்கும் ஆட்டுக்கால் கிழங்கு போன்றவைகள் கொல்லிமலை வழங்கும் இயற்கையின் கொடைகளாகும்.

Comments

Popular posts from this blog

Pi Crypto currency

மழை

ஆடி அமாவாசை