வேங்கை மரம் Vengai Maram
அருகிவரும் குழந்தைகளுக்கு வேங்கைப் பால் திருஷ்டி பொட்டு வைக்கும் வழக்கம்!
சேலம் மாவட்டம் பேளூர் அருள்மிகு தான்தோன்றிநாதர் திருக்கோயில் ஆடிப் பதினெட்டு விழாவினை முன்னிட்டு சேவார்த்திகளின் கூட்டம் அலைமோதும்.அப்பொழுது பல்வேறு பொருள்களை விற்கும் அங்காடிகள் நூற்றுக்கணக்கில் காணப்படும்.
அவ்வங்காடிகளில்,குழந்தைகளுக்குத் திருஷ்டிப் பொட்டாக வைக்க உதவும் வேங்கைப் பால் சிரட்டைகளை, விற்பனைக்குக் கல்வராயன் மலை மலைவாழ் மக்களான மலையாளிகள் [ மலையில் வாழ்பவர்கள் என்று பொருள்;தமிழ் பேசுகிற பழங்குடியினர்]கொண்டுவருவார்கள்.இவ்வாண்டு ஒரேவொரு அங்காடியில் தான் வேங்கைப் பால் சிரட்டைகளைக் காண முடிந்தது.
இதனைப் பற்றி கேட்டதற்கு,'' வேங்கை மரங்களை முன்பு போல் காணமுடிவதில்லை;அருகிவிட்டன;இனி வருங்காலத்தில் காடுகளில் வேங்கைமரங்கள் இருக்குமோ இருக்காதோ ''என்று பதில் கிடைத்தது.
வேங்கை மரத்தின் சிவப்பு நிற பிசின் உலர்ந்ததும் கருப்பாகி விடும். இந்த பிசினை குழந்தைகளுக்குத் திருஷ்டி பொட்டாக வைப்பர்.
'' வேங்கை மரத்துப் பிசின் குழந்தைகளுக்குத் திருஷ்டி போக்கும்;நோய்எதிர்ப்பு ஆற்றல் கூடும்;ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்;
கண்கள் வசீகரமாகும் ;உடலில் உள்ள Co² ஐ வெளியேற்றும்.'' என்னும்தன்மையால்,குழந்தைகளுக்கு வேங்கைப் பால் பொட்டு வைக்கும் வழக்கம் இந்தியா முழுவதும் இருக்கிறது.
தற்பொழுது இவ்வழக்கம் மிகவும் அருகிவருகிறது.
சரி, வேங்கைமரத்தின் சிறப்புகளைக் காண்போமா?
வேங்கை மரம் உள்ள பகுதியில், மின்னல் தாக்காது. மோசமான கதிர் வீச்சுகள், இடி, மின்னலில் இருந்து பாதுகாக்கும் சக்தி, வேங்கை மரத்துக்கு இருப்பதால், பழங்கால கோவில்களின் கொடிமரம், கதவுகளை, முன்னோர், வேங்கை மரத்தில் அமைத்தனர்.
நம் தமிழ்க் கடவுளான முருகப் பெருமான் இம்மரத்தில் வாசம் செய்வதாக வேதங்கள் குறிக்கின்றன.
பல ஆலயங்களில் தல விருட்சமாக வேங்கை மரம் இருக்கும். மருத்துவக் குணங்களில் அசாத்திய ஆற்றல் படைத்த வேங்கை மரத்தை நலவிருட்சம் என்றாலும் தகும். உலகையே அச்சுறுத்தும் சர்க்கரை நோயைச் சரிக்கட்டவும்,
உடல் வெப்பத்தைக் கட்டுக்குள் கொண்டுவரவும் இயற்கை அளித்த அபூர்வ வரம்... வேங்கை மரம்!
வாட்டி எடுக்கும் கோடையிலும் பூமியின் வெக்கையை உள்வாங்கிக்கொண்டு குளிர்ச்சியைத் தரும் விசேஷ சக்திகொண்ட மரம் இது.
சுந்தரர் அருளிய தேவாரம் ஏழாம் திருமுறையில், திருநன்னிலம் சிவன் கோயிலைப் பற்றியும் அங்கு இருந்த வேங்கை மரங்களைப் பற்றியும் ஒரு பதிகம் பாடப்பட்டு இருக்கிறது.அத்தலத்தில் வேங்கை மரம் உள்ளது.
வேங்கை மரப் பட்டையில் உள்ள டிரோசிலிபின் (Pterosylebene) என்கிற வேதிப் பொருள், சர்க்கரைநோயைக் குணப்படுத்தும் வல்லமைகொண்டது. இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வுக்கு உட்படுத்தி நிரூபித்து இருக்கிறது.
சர்க்கரைநோய் உள்ளவர்கள் வேங்கைப் பட்டையை அரைத்துப் பொடியாக்கி சாப்பிடலாம்; அல்லது நான்கு டம்ளர் அளவு தண்ணீரில் வேங்கைப் பட்டைப் பொடியைக் கலந்து, ஒரு டம்ளர் அளவுக்கு அதைக் சுண்டக் காய்ச்சிக் கஷாயமாகவும் குடிக்கலாம்.
சிறுநீரகம், கண், இதயம், நரம்பு போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கும் வேங்கைப் பட்டை சூரணம் மிகவும் நல்லது. களைப்பு, உடல் பலவீனத்தைப் போக்கி, உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கவல்லது.
இதில் உள்ள துவர்ப்புத் தன்மை தோல் சுருக்கம் அடைதல், மூட்டுத் தேய்வு போன்ற வயோதிக மாற்றங்கள் வேகமாக நடைபெறாமல் மட்டுப்படுத்தும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் மூலிகை எண்ணெய்த் தயாரிப்பிலும் வேங்கைப் பட்டைக்குத் தனி இடம் உண்டு.
நீரிழிவு நோயுள்ளோர் வேங்கை மரக்குவளையில் நீர் அருந்தினால் குணம் பெறலாம். வேங்கை மரப் பிசின் வயிற்று நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.
தொற்று நோய்களுக்கும் மகத்தான தீர்வாக இருக்கிறது வேங்கை மரம். எனவே, ஊருக்கு பத்து வேங்கை மரங்களாவது வளர்க்க வேண்டும். வேங்கைப் பட்டையில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் நிரம்பிக் காணப்படுவதால், இதன் பட்டைக் கஷாயம் பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்பு சம்பந்தமான குறைபாடுகளைக் குணப்படுத்தும். இரும்புச் சத்தை அதிகரிக்கப் பயன்படுத்தும் மருந்துகளிலும் இந்தப் பட்டையைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தோல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதில் வேங்கை மரப்பட்டையின் வீரியம் அதிகம்.
தேக்கிற்கும், தோதகத்திற்கும் அடுத்து தரமான மரமாக கருதுவது வேங்கை ஆகும்.
வேங்கை மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொண்டால் பேய், பிசாசு, காற்று, கருப்பு இவைகள் நம்மை அண்டாது என்னும் நம்பிகை காலம்காலமாக இருந்துவருகிறது.
இலக்கியங்களில் வேங்கை மரம்=
2௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டின் காடுகளில் யானையும் புலியும் சண்டை போடுவது தினமும் நடந்த நிகழ்ச்சிகளாகும்.
வேங்கை மரத்தின் மஞ்சள் நிறப் பூக்கள் பாறைகளில் மீது விழுந்து கிடப்பது, புலி உட்கார்ந்து இருப்பது போலத் தோன்றுமாம். இதைக் காணும் யானைகள் அதை உண்மையான புலி என்று எண்ணி மோதுமாம். இது கபிலர் கண்ட காட்சி (கலித்தொகை ௩௮ ,௪௯ )
காட்டு ஓரப் பகுதிகளில் இசைக் கலைஞர்கள் பறை கொட்டி இசை பாடியதைக் கேட்ட யானைகள், அதை புலி உறுமல் என்று எண்ணி கோபம் கொண்டனவாம். உடனே அங்கே பூத்துக் கிடந்த வேங்கை மரங்களை புலி என்று கருதி தாக்கி, அதன் ஒரு கிளையை தன் தலைமீது போட்டுக்கொண்டு பிளிறியதாம் அந்த சப்தம் மலைமீது மோதி எதிரொலி செய்தனவாம். இது பரணர் கண்ட காட்சி (பதிற்றுப் பத்து ௪௧ )
நெடுவெண் நிலவினார் (குறுந்தொகை ௪௭ ) வேறு ஒரு காட்சியை நம்முன் வைக்கிறார்:-
வானில் பிரகாசிக்கும் நிலவைப் பார்த்த தோழி , காதலன் வருவதற்குரிய நேரம் அதுவல்ல என்கிறாள்; ஏனெனில் கீழே வேங்கை மரத்தின் மஞ்சள் நிறப்பூக்கள் பாறைகளின் மீது விழ்ந்து கிடக்கின்றன. இதைப் பார்த்து புலி என்று காதலன் அஞ்சக் கூடும்:-
கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை வெண்ணிலவே
–நெடுவெண்ணிலவினார், குறுந்தொகை ௪௭
பண்ணமை முழவும் பதலையும் பிறவும்
கண்ணறுத்து இயற்றிய தூம்பொடு கருக்கிக்
காவின் தகைத்த துறைகூடு கலப்பையர்
கைவல் இளையர் கடவுட் பழிச்ச
மறப்புலிக் குழூ உக்குரல் செத்து வயக்களிறு
வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கைப்
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்
மாயிருஞ் சென்னி அணிபெற மிலைச்சி
வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்
–பதிற்றுப் பத்து-௪௧ , பரணர்.
நன்றி =Tamil and Vedas
A blog exploring themes in Tamil and vedic literature.
புகைப்படங்கள்==
முதற்கண் சிரட்டைகளில் சேகரிக்கப்பட்ட வேங்கைப் பால்;வேங்கைமரம் படங்கள்.நிறைவாக,வேங்கைப்பால் சேகரித்தல்.
Available @ Aravind Kumar R AGASTHEESWARA AGENCIES
94444 98301
https://www.youtube.com/watch?v=Xs0XkoZ1zgQ
https://www.youtube.com/watch?v=dgdmhRWoE28
https://www.youtube.com/watch?v=UcN7MJ_MA6Q
https://www.youtube.com/watch?v=hKoZy7H9jVQ
https://www.youtube.com/watch?v=ncF0QQ7zxiw
https://www.youtube.com/watch?v=F1hlRi5djJI
https://www.youtube.com/watch?v=plSvlaqaxQA
Comments
Post a Comment